கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், 
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி

     
  இருட்டு பேசுகிறது  
  சுனாமி வேட்கை  
  நான்தான் வேண்டும் எனக்கு  
  தமிழ்  
  தமிழ்த்தாய் வாழ்த்து - இசையோடு  
  சரணமென்றேன் - இசையோடு  
  உயிர் மலரும் - இசையோடு  
  குபுக் குபுக் குற்றாலம்  
  சொல்லிவிடவா  
     
  இருட்டு பேசுகிறது  
   
  நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம் 
வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்

புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன

கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன
உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது 

வெளிச்சம் உங்களைப் 
பொய்யுடன் பிணைத்துக் கட்டுகிறது
வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்

வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்

வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்

வெளிச்சம் பொய் இருட்டே நிஜம்

வெளிச்சம் துயரம்
இருட்டே சந்தோஷம்
வெளிச்சம் அரக்கன்
இருட்டே உங்கள் தாய்

நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும் வெளிச்சம் 
உங்களுக்குத் தந்த விசங்கள்

அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட கதைகள்தாம் 
இருட்டை பயமென்று பிதற்றுகிறது

கருப்பையில் பயந்தீரா வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது

வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை
புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா

சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து
உருவங்களாலா உள்ளங்களாலா

யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்
வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை

தினம் தினம் வெளிச்சம்
உங்களை ஏமாற்றுகிறது

தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்

பூமி இருட்டு
நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு
பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்
 
     
  சுனாமி வேட்கை   
   
  மனம் பறிகொடுத்து 
மணிக்கணக்காய் ரசிக்கும் மக்கள் 
இன்று உயிர் பறிகொடுத்து
அலை பார்க்க நேர்ந்தது

படுத்துக்கிடக்கும்போதே
பயமாய் இருக்கும் 
கடல், எழுந்து நின்றால் 
என்னாவது

கரைகளிலெல்லாம் 
கண்ணீர்
ஓரங்களிலெல்லாம் 
ஓலம்

சிப்பிகளுக்கெல்லாம்
முத்து வழங்கும் கடல்
உயிர் முத்துக்களை
அபகரித்துக்கொண்டு
மனித உடல்களை
வெற்றுச் சிப்பிகளாக்கி
விசிறியடித்துவிட்டது

தன்னிடம் வந்து
உழைப்பைக் கொட்டிய
மீனவ உயிர்களை
கட்டாய ஓய்வு கொடுத்து
பிணங்களாய்
ஊருக்குள் கொண்டுவந்து
கொட்டிவிட்டுப் போய்விட்டது

பாவம்... 
கடல் என்ன செய்யும்
நிலநடுக்கத்தின் 
பினாமிதானே இந்தச் சுனாமி

கடலின் இடுப்பை 
நிலம் ஒடிக்க ஒடிக்க
கதறிக்கொண்டு வந்த
ஒப்பாரிதானே இந்தச் சுனாமி

தன் கோடிக் கரங்களால்
வெறிகொண்டமட்டும் 
கரைகளைப் பிறாண்டியபோது
கணக்கற்ற உயிர்கள் 
கிழிந்து உதிர்ந்தன

எனக்கொன்றும் தெரியாது
நான் குற்றமற்றவளென்று
நிலத்தின் மடிகளிலேயே
சடலங்களை வீசிவிட்டு
சடுதியில் ஓடிவிட்டது கடல்

பூமிக்கு 
இது வெறும் நடுக்கமல்ல
மல்யுத்தத்தில் 
மரணஅடி பட்ட நிலை

நாடுகளெல்லாம் 
நகர்ந்துபோய்விட்டன
தாழ்ந்தும் உயர்ந்தும் 
நிலைகுலைந்துவிட்டன

பூமிக்கோள்
தன் அச்சிலிருந்து
சடக்கென்று வழுக்கி 
விலகிப்போய்விட்டது

பூமியைச் சொல்லியும்
குற்றமில்லை
இவையெல்லாம்
வானத்தின் லீலைகள்

மனிதனின் சக்தி
எப்போது 
வானத்தை வளைக்கும்?

நாச வேலைகளை
உதறியெறிந்துவிட்டு
எப்போது மனிதன்
முழுமையாய்த் தன்னை 
அதில் நுழைப்பான்?

அதுவரைக்கும் ஆளாளுக்கு 
ஆயுள் கணக்குப் போடாதீர்கள்

நிரந்தரமென்று எதுவுமில்லை 
என்ற நிரந்தரத்துக்குள் 
முடங்குங்கள்
 
  டிசம்பர் 26, 2004: கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேரை சுனாமி விழுங்கியது  
     
  நான்தான் வேண்டும் எனக்கு  
   
 

அன்பே 

நீ 
கேட்டதைவிடக் 
கூடுதலாய்த்தானே கொடுத்தேன் 
நீ கேட்காததையும்
நானே கண்டுபிடித்துச் சேர்த்து

நீ
சொன்னதையெல்லாம்
சுத்த நெய்யினால் 
சுடப்பட்ட நிஜங்கள் 
என்றுதானே நம்பினேன்

காதல் 
வெறும் வாய் வித்தையல்ல
செயல் 
என்று நான்
நிரூபிக்காத நாளுண்டா 

நிறுத்தாத பேச்சும்
நிமிடத்திற்கொரு முத்தமுமென
சுவர்க்க மத்தியில்தானே
மனங்கள் மணக்க மணக்க
மல்லாந்து கிடந்தோம்

உன் கண்களுக்குள் புகுந்து 
வண்ண வண்ணக் கனவுகளை 
விசாரித்து விசாரித்து
அத்தனையையும் நான்
உண்மையாக்கித்தானே 
நிமிர்ந்தேன்

என்னைப் பார்த்தேன் என்று 
நான் 
உன்னைப் பார்த்துத்தானே 
சொன்னேன்

ஆழமும் அழுத்தமும் 
காதலின் முத்திரைகள் என்று 
உறங்காத கடலாய்க் கிடந்துதானே
உன்முன் அலைகள் தொடுத்தேன்

இன்று ஏன் என்னை
ஒன்றுமில்லாதவனாக்கிவிட்டாய் 

நீயே வலியவந்து இழுத்த தேரை
ஏன் திராவகத் தீயில் 
செலுத்தினாய் 

உன் 
இடறிய தேவைகள்
நம் காதலைக் கொன்றனவா 

நீயும் நானும் காதலிக்க
ஒரு கோடி காரணங்கள் சொன்னாய்
பிரிவதற்கு மட்டும்
ஒரே ஒரு காரணம்தானே சொன்னாய்
அதுவும் உப்பு சப்பில்லாமல் 

இறுதியாய்

என் 
உயர்காதல் விழிநோக்கும் 
உரங்கெட்டுத் தலைதாழ்த்தி 
நரக உதடுகள் நச்சு இழைகளாய்
ஒட்டி ஒட்டிப் பிரிய

ஒப்புக்கு நீயோர்
மன்னிப்பு கேட்டதை
புரியாத மூடனல்ல நான்
இருந்தும் அழுது நிற்கிறேன் 

நீயும் நானும் ஆடிய ஆட்டங்களில்
இதய அணுக்கள் தேயத் தேய
நிஜமாய் நின்றவனாயிற்றே நான் 

மௌனங்கள் பூட்டி 
உதடுகள் ஒட்டி
உள்ளம் திரிந்து நிற்கும் உன்னிடம்
இனி நான் என்ன கேட்பது 

உன்னை இழந்தேன் என்பதை நான் 
நம்பமறுத்தாலும்

தொடர்ந்து என்னை
என்னாலேயே 
ஏமாற்றிக்கொள்ள இயலாததால்
இன்று நான்
ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன் 

கண்ணீர்க் கரைகளில்
மெல்ல மெல்ல என் எண்ணங்கள்
மேலே மேலே எழுகின்றன

என் பிரியமான பாவியே 
நிலைக்கத் தெம்பில்லா 
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன் 

மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த 
என்னையுமல்லவா இழந்துவிட்டேன் 
.

ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும் 
நான்தான் வேண்டும் எனக்கு

தண்டவாளங்கள் நீளமானவை
அடுத்த ரயிலுக்கு இன்னும் 
ஐந்து நிமிடங்கள் என்று 
அறிவிப்புகளும் வருகின்றன

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச் சாவது
ஒருக்காலும் உசிதமல்ல

நானும் போய் 
காத்திருக்க வேண்டும்

எனவே
என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும் 
நான்தான் வேண்டும் எனக்கு 

 
 

 

 
  தமிழ்  
  இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் இரு அடிகளையும் கவனியுங்கள். 'இதயம்' என்று துவங்கி 'மொழி' என்று முடிகிறது. பின் 'தமிழ்' என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் 'மொழி' என்னும் சொல்லிலேயே துவங்கி 'இதயம்' என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது. இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.  
   
  இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்

கவிதைக்குள் விளைகின்ற வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற கவிதை

விரலுக்குள் ஊறிவரும் எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்

ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும் வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும் காற்று

பார்வைக்குள் விரிகின்ற வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற பார்வை

மண்ணுக்குள் கருவான வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற மண்

இயற்கைக்குள் முத்தாடும் மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற இயற்கை

மனசுக்குள் எழுகின்ற உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற மனசு

மூச்சுக்குள் உள்ளாடும் தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும் மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற மோகம்

முயற்சிக்குள் முளைவிடும் சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும் கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும் மனிதம்

உயிருக்குள் குடிகொண்ட மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற உயிர்

தீபத்துள் வாழ்கின்ற புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற தீபம்
 
     
  தமிழ்த்தாய் வாழ்த்து  
   
  இசையில் கேட்க  
  விற்பனர்க்கும் அற்புதமே
   முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
   சுற்றுலக முற்றுகையே
வெற்றிநிறை கற்றறிவே
   நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணை பெற்றுயர
   பற்றுகிறேன் நற்றமிழே
 
 

மேலே செல்ல

 
  சரணமென்றேன்   
   
  இசையில் கேட்க  
  அலையலையாய் வீசுதடி 
     ஞாபகங்கள் உன் 
தலைமுடிக்குள் நழுவுதடி 
     யோசனைகள்

துளைவழியே ஊதுதடி 
     உயிரிதழ்கள் உன் 
துணைகேட்டுப் பாடுதடி 
     காற்றலைகள்

பழையதயிர் மதமதப்பில் 
     கன்னவில்லை அதில் 
போனஉயிர் போனதுதான் 
     மீளவில்லை

தலைகொதித்தே வெடித்தாலும் 
     விடுவதில்லை உன் 
தீயிதழால் நீவிரிக்கும் 
     முத்தவலை 

நிலைகுலைக்கும் நீள்விழியின் 
     ஒயிலாட்டம் என் 
நெஞ்சடுப்பில் எனைத்தள்ளும் 
     புயலாட்டம்

கலைகொழிக்கும் இடைதொட்டுத் 
     திண்டாட்டம் என் 
காலமெல்லாம் காணவேண்டும் 
     கொண்டாட்டம்

மழைவிழுந்த மண்வீசும் 
     வாசனைபோல் என் 
மனமெங்கும் நீவிழுந்த 
     வாசமடி

குலைகுலையாய்ச் சரிந்துநிற்கும் 
     வாழையடி உன் 
கோலங்கண்ட காய்ந்தநதி 
     ஊறுதடி 

பள்ளங்களோ 
     வளர்நாளில் ஏராளம் உன் 
பனிதூவும் புன்னகையால் 
     மேடாகும்

நில்லுங்கள் ராசாவே 
     என்றழைத்து இடும் 
நெற்றிமுத்தம் துயர்வேரைக் 
     கொன்றழிக்கும்

வள்ளலுனை வாழ்வினிலே 
     கண்டுவிட்டேன் என் 
வாய்க்காலில் கங்கைவளம் 
     கொண்டுவிட்டேன்

உள்ளங்கை நடுவிலுனை 
     உறங்கவைத்தே என் 
உயிர்மூச்சுக் காற்றாலே 
     உனைக்காப்பேன்

மேகமொட்டு மலைமுகட்டில் 
     ஓய்வதுபோல் என் 
மார்மீது மதுசொட்டச் 
     சாய்கின்றாய்

தேகமெல்லாம் எலும்பழியக் 
     குழையுதடி உயிர் 
திரவத்தோடு திரவமென்று 
     வழியுதடி

நாகமணித் தேரிழுத்து 
     ஓடிவந்தேன் நீ 
நாணமுடன் காலெடுத்து 
     ஏறிக்கொண்டாய் 

சோகங்களைக் கொத்தாகத் 
     தீயிலிட்டாய் உன் 
சொந்தமென்று சொல்லியெனை 
     உயிரிலிட்டாய்

பயிரழிந்து பட்டுப்போன 
     பாழ்நிலத்தில் புதுப் 
பசுமையேற்றிப் பரிவோடு 
     ஏருழுதாய்

உயிரெடுத்து உயிருக்குள் 
     ஊட்டுகின்றாய் என் 
உயிர்த்துடிப்பை எனக்கே நீ 
     காட்டுகின்றாய்

கயிறிழுக்கும் போட்டியுள்ளே 
     நடக்குதடி என் 
கர்வமெல்லாம் பெண்மையிடம் 
     தோற்குதடி

சுயநினைவில் உயிலொன்று 
     எழுதுகின்றேன் உன் 
சொர்க்கவிழிச் சிறையொன்றே 
     சரணமென்றேன்
 
     
  உயிர் மலரும்  
   
  இசையில் கேட்க  
  மழை பொழிய பொன் 
     மழை பொழிய
மனம் நனையும் என் 
     மனம் நனையும்

மனம் நனைய என் 
     மனம் நனைய
முகம் தெரியும் உன் 
     முகம் தெரியும்

முகம் தெரிய உன் 
     முகம் தெரிய
உயிர் மலரும் என் 
     உயிர் மலரும்
 
     
  குபுக் குபுக் குற்றாலம்  
   
  நான் கவிதை எழுதினால் என் நோட்டுப் புத்தகத்தைத் தாண்டி அது வேறு எங்கும் செல்லாத நாட்கள். நான் வெட்கப் படுவேன்தான், என் கவிதைகளை வேறு எவரிடமும் காட்டுவதற்கு. அது என் முதல் காதலை அது முளைத்தபோதே ஊர் கூட்டிச் சொல்லுவதைப்போல எனக்குச் சங்கடமாய் இருக்கும். ஏனெனில் கவிதை என்பது ஒரு வகையில் எனக்கு என் இதய ரகசியம்தான். பிறகுதான் புரிந்துகொண்டேன், என் இதய ரகசியங்கள்கூட என் வார்த்தை வசீகரத்துக்காக, பகிர்ந்துகொள்ளப்படவேண்டியவைதான் என்று. 

அதன்பின்னும் நண்பர்கள் என் கவிதைகளை வாசிக்கும்போது என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். இது உன் சொந்த அனுபவம்தானே என்ற கிண்டல் அதில் இருக்கும். என் அனுபவம்தான். துவக்கத்தில் அது முழுக்க முழுக்க என் அனுபவம்தான். பிறகெல்லாம், மற்ற நண்பர்களின் அனுபவங்களும் எனக்குக் கவிதைகளாயின. பார்த்துப் பாதி உணர்ந்து பிறகு மீதியை கற்பனையால் நிரப்பிக் கொண்டவையும் கவிதைகளாயின. 

இப்போதெல்லாம், எங்கோ ஓர் மூலையில் அழும் குழந்தையின் உணர்வுகள் தெளிவாகக் கேட்கிறது. நான் எழுதுகிறேன். ஆக, கவிதைகள் சொந்த அனுபவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும், சொந்த உணர்வுகள்தாம் அவை. என்னால் உணராமல் எதையும் எழுதிவிட முடியாது. இந்த உணர்வுகளைப் பெற்றதற்காக நான் பெரிதும் பெருமை கொள்கிறேன். அந்த உணர்வுகளே கவிஞன். 

நான் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் வணிக நிர்வாகம் (Business Administration) படித்துக் கொண்டிருந்தபோதுதான் முதன் முதலில் குற்றாலம் சென்றேன். அதற்குமுன் நான் என் சிறுவயதில் சென்றிருக்கிறேனாம். எனக்கு நினைவு தெரியாத அனுபவத்தை என்னால் நினைவில் கொள்ளமுடியாதென்பதால் அதை நான் சென்றதாய் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. 

கல்லூரியின் துடிப்புத்தனத்தோடு நான் குற்றாலம் சென்றதும், மலைமீது நெடுந்தூரம் ஏறிச்சென்று, தேனருவியில் தனித்து நீந்தியதும், "நீ மீண்டுவந்தது அதிசயம், பெரும்பாலும் மரக் கிளைகளால் சுழற்றப்பெற்று மடிபவர்களே அதிகம்" என்றதை அலட்சியப்படுத்தி சந்தோசமாய்க் கூச்சலிட்டதும்.... அது ஒரு வயது. எனக்கு நீந்தத் தெரியும் நான் தஞ்சாவூர்க்காரன் என்று என்னோடு வந்த சென்னைப் பொடியன்களுக்குப் பெருமையாய் அறிவிப்பதே எனக்கு அன்றைய சாகசமாகப்பட்டது. இப்படியான தத்துப்பித்துச் சாதனைகள் என் வாழ்வில் அவ்வப்போது நான் செய்துவந்திருக்கிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம். பின் என் கல்லூரி கழிந்த அடுத்த ஆண்டே சவுதியில் நான் சிறைபட்டேன். ஆமாங்க... என்னால் அதை அப்படித்தான் சொல்லமுடியுங்க.... நான் சவூதி சென்று என் முதல் பணியில் அமர்ந்தேன். அதைத்தான் சிறைப்பட்டேன் என்கிறேன். ஒரு எட்டு மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே உடகார்ந்திருப்பது கடுஞ் சிறையல்லவா? எப்படி இயலும் ஒரு கல்லூரி இளைஞனுக்கு? அதுவும் கவிதை மனம் கொண்ட பறவைக்கு? துடிப்பான இளைஞனுக்கு? அந்தப் பாலைவெளியில் என் கவிதை உணர்வுகளைத் துறந்து, நெருக்கமான நண்பர்களின் கச்சா முச்சா சம்பாசனைகளைத் துறந்து, பாரதிராஜா, பாலுமகேந்திரா, கங்கையமரன் லூட்டிகளைத் துறந்து, அடடா.... மகா கஷ்டம் மகா கஷ்டம். அது கொடுஞ் சிறையேதான். ஆனால் அதே சமயம் நான் சவூதியை மறக்கமாட்டேன். எனக்கு முதல் வேலை தந்ததும். என் குடும்பத்தை நிலை நிறுத்தியதும். எனக்கு அனுபவங்களை வாரிக்கொடுத்ததும் சவூதிதான். மனம் நெகிழ்ந்து சில கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

அந்தக் காலக்கட்டத்தில், ஒரு அறிவிப்பு குமுதத்தில் வந்தது. "குபுக் குபுக் குற்றாலம்" என்ற தலைப்பில் கவிதை எழுதி பரிசு பெறுங்கள். கவிஞர் நிர்மலா சுரேஷ் பரிசுக்கான கவிதைகளைத் தேர்வு செய்கிறார். நானோ, சொந்தத்தில் எழுதி சொந்தத்தில் வாசித்து சொந்தத்தில் முகர்ந்து சொந்தத்தில் சுகப்படுபவன். ஆனாலும் நண்பர்களின் தூண்டுதலால், அலிபாபா இதழ்களில் என் கவிதைகளை இடம்பெறச் செய்திருக்கிறேன். மாலனின் திசைகளில் என் கவிதைகளை வரச்செய்திருக்கிறேன். நா. பார்த்தசாரதியின் தீபத்தில் என் கவிதைகளை ஊர்வலம் போகச் செய்திருக்கிறேன். வலம்புரி ஜான் ஆசிரியராய் இருந்த தாய் பத்திரிகையில், ஆசிரியர் பக்கத்திலேயே என் கவிதைகளை பிரசுரிக்கச் செய்திருக்கிறேன். ஆக, இந்த முதல் போட்டியில் கலந்துகொள்வது என்று முடிவெடுத்துவிட்டேன். 

அது என் மகள் பிறந்த நேரம். முதல் குழந்தை. எத்தனை ஆனந்தமும் குதூகலமும் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். என் மகள் பெயரில் 'குபுக் குபுக் குற்றாலம்' தலைப்பிற்கு என் போட்டிக் கவிதையை அனுப்பிவைத்தேன். பாலையில் காய்ந்துகிடந்த எனக்கு பசுமையாய் இருந்த குற்றால நினைவுகள் வார்த்தைகளை வாரி வாரித் தந்தன. அப்படியே பதிவு செய்தேன். நிர்மலா சுரேஷ் அக்கவிதையைத் தேர்வும் செய்துவிட்டார். ஏதோ பரிசுத்தொகை தருகிறேன் என்றார்கள் குமுதத்தினர். அட... அதெல்லாம் வேண்டாமய்யா.. இந்தப் பரிசு எனக்கு ஒரு கோடி பொன் பெறும் என்று எழுதி அனுப்பினேன்.

இப்போது பார்க்கும்போது, இது என்ன அத்தனை உசத்தியான கவிதையா என்று எண்ணத் தோன்றுகிறது. இதைவிட அருமையான கவிதைகள் பல நான் எழுதிவிட்டேன் என்றே நினைக்கிறேன். இக்கவிதையில் மேலோங்கி நிற்பது குதூகலம் தேடும் ஒரு இளைஞனின் ரசனை உணர்வுகள்தாம். அதற்குப் பரிசும் தேவைதான். அது எங்கே மீண்டும் நமக்குக் கிடைக்கிறது? சொல்லுங்களேன் பார்க்கலாம்? 

ஆக நான் பரிசு பெற்ற முதல் கவிதை இதுதான். நான் கலந்துகொண்ட முதல் போட்டியும் இதுதான். 

நம்ம ஊரு நயாகராவே

பட்டுப் பட்டென்று
தலையில்
கொட்டிக் கொட்டி
உள்ளத்தில்
கெட்டிமேளம் அடிப்பது
உன் தண்ணீர்க் கரங்களா

கைகள் கட்டிக்கொள்ள
கால்கள் ஒட்டிக்கொள்ள
தரிகிடதோம் ஆடவைப்பது
உன் 
சிலீர்ச் சந்தங்களா

யார் நீ
அதோ அந்த
நிலாவிலிருந்து கசிந்துவரும்
வெள்ளிச் சரமா

அல்லது
வானவில்லிலிருந்து
நழுவி விழும்
ஒற்றை வர்ணமா

அப்பப்பா
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்

நீ
கொட்டுவதோ கோபமாய்
ஆனால்
இத்தனைக் குளிர்ச்சியாய்
ஒரு கோபத்தை நான்
வேறெங்கு