கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், 
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி

     
  இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

186 Staines Road
Toronto, Ontario M1X 1V3
Canada

416-985-5959 Cell
buhari@gmail.com 

 
  மரவண்டு கணேஷ் - கவிஞர் புகாரியுடன் ஒரு சந்திப்பு   
  உங்கள் எண்ணங்களில்  
  என்னைப்பற்றி  
  நிலாச்சாரல் நேர்காணல்  
  உலகின் முதல் இணையநூல் வெளியீடு  
  நன்றி  
 

மேலே செல்ல

 
  மரவண்டு கணேஷ் - கவிஞர் புகாரியுடன் ஒரு சந்திப்பு   
   
  எழுத்தாளர் மாலனின் திசைகள் சார்பாக கவிஞர் புகாரியை சிறப்பிக்கும் பொருட்டு சென்னை நியூ உட்லேண்ட்ஸ் ஓட்டலில் இலக்கிய விழா ஒன்று கடந்த திங்கள் கிழமையன்று (09/05/2005 ) அரங்கேறியது.

விழா ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே நான் நியூ உட்லேண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்றுவிட்டேன்.சற்று நேரத்தில் மாலன் தன் துணைவியாருடன் வந்தார். விழாவுக்கு வந்திருந்தவர்களை மாலன் இன்முகத்தோடு வரவேற்றார்.

புதுவை இராஜ.தியாகராஜன் ஜிப்பா சகிதமாக அறைக்குள் நுழைந்தவுடன் மாலனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு என்னருகே அமர்ந்து கொண்டார்.

நேரம் 5.45 ஆகிவிட்டது. நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் 15 நிமிடங்கள் தான் இருந்தன.நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு கட்லட், முந்திரிப்பருப்பு (நெய்விட்டு வருத்ததா ? பிரமாதம் போங்க) அல்வா,ஐஸ்கிரீம் எல்லாம் பறிமாறப்பட்டன.

நேரம் 6 மணியை நெருங்கியவுடன் மளமளவென்று மக்கள் கூட்டம் அரங்கினுள் நுழைந்தது. நான் எதிர்பார்த்திராத பல நண்பர்கள் விழாவிற்கு வந்திருந்தார்கள்.கவிஞர் சேவியர் மற்றும் அவருடைய மனைவியார், ஐகாரஸ் பிரகாஸ், கிரிதரன், மதுரபாரதி, ஹரி கிருஷ்ணன், சுரேஷ் கண்ணன், சிபி வெங்கடேஷ், அரவக்கோன் மற்றும் அவரது மனைவி கிருஷாங்கினி, வ.ஊ.சி யின் பேரன், பத்ரி சேஷாத்ரி, சிறகு ரவிச்சந்திரன், கவிஞர் ஜெயபாஸ்கரன், அமிர்தம் சூர்யா, லேனா தமிழ்வாணன் மற்றும் நான் அறிந்திராத பல நண்பர்களும் கவிஞர்களும் வி்ழாவுக்கு வந்திருந்தார்கள்.

புகாரி அரங்கினுள் நுழைவதற்கு முன்பே மாலன் அவர்கள் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். கோட் சூட்டுடன் கவிஞர் புகாரி வந்திருந்தார். அவரைச் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டேன், நான் வந்தது கண்டு மகிழ்ச்சி என்று கூறினார்.நானாவது பெங்களூரில் இருந்து தான் சென்றிருந்தேன். ஆனால் கவிஞர் சேவியரோ இந்த விழாவிற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து பறந்து வந்திருந்தார்.

நானும் கவிஞர் சேவியரும், எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மற்றும் கலைவிமர்சகர் இந்திரனோடு சிறிது நேரம் இலக்கியம் பேசினோம்.

0

விழா சற்று தாமதமாகத் தொடங்கியது. மேடையில் அமுதசுரபி பொறுப்பாசிரியர் அண்ணாக்கண்ணன், கவிதாயினி வைகைச்செல்வி, கவிஞர் யுகபாரதி, கவிஞர் இந்திரன், கவிஞர் புகாரி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

0

முதலில் மாலன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.இந்த விழாவானது வழமையான சம்பிராதய முறைப்படி இல்லாமல் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என்று மாலன் தெரிவித்தார். விழாவில் பேசிய யாருமே " அவர்களே இவர்களே "என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்று பார்வையாளர்களைப் கடுப்பேத்தவில்லை.

மாலன் தனது பேச்சினிடையே சுவாரஸ்யமாக வார்த்தைச் சிலம்பம் வீசினார்." என்னை புகாரி இந்த விழாவிற்கு தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தச் சொன்னார், எனது தலை "மை" யை ஏற்கும் நிலையில் இருந்தாலும், நான் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதோடு நிறுத்திக் கொள்கிறேன் என்று புகாரியிடம் கூறி விட்டேன் " என்றார் மாலன்.


மேலும் " புகாரி கவிதை வேண்டிய அவசியமே இல்லை, அவர் பணிபுரியும் அலுவலகத்தில் அதிகப்படியாக ஒரு மணிநேரம் வேலை செய்தால் அதற்கேற்றார் போல ஊதியம் கிடைக்கும்.இருப்பினும் புகாரிக்கு தமிழின் பால் இருக்கும் ஆர்வமே அவரைக் கவிதை எழுதவைக்கிறது.

அவருடைய தாயார் அவரை ஒரு டாக்டராக்கிப் பார்க்க வேண்டும், தன் மகன் கையில்ஒரு ஊசியை எடுக்க வேண்டும் என்று நினைத்தார், ஆனால் புகாரியோ தனது கையில் நூலை (புத்தகம்) எடுத்துக் கொண்டார், மக்களின் நோய் தீர்க்கும் மருந்து தருவார் என எதிர்பார்த்தார், ஆனால் அவரோ நமக்கெல்லாம் கவிவிருந்து தருகிறார்.. என்று எதுகையில் விளாசித் தள்ளினார் மாலன்.


மாலனுக்குப் புகாரி பொன்னாடை போர்த்தியவுடன்,எனக்கு ஆடை எல்லாம் தரவேண்டாம், இன்னும் சிலநூல்கள் (புத்தகம்) தாருங்கள் என்று மாலன் கூறியவுடன் அரங்கமே கலகலப்பானது.

மாலன் தனது வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மேடையில் அமர்ந்திருந்த கவிஞர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தோடு அவர்களைப் பேச அழைத்தார்.

0

முதலில் கவிஞர் இந்திரன் பேசினார். அறைக்குள் ஆப்பிரிக்க வானத்தைக் கொண்டு வந்த இந்திரனைஎல்லோரும் விமர்சகர் என்று சொல்கிறார்கள். ஆனால் விமர்சகன் என்றால் மரப்பசு என்று பொருள், மரப்பசு என்றால் சரக்கு ஒன்றும் கிடையாது என்று அர்த்தம், ஆகையால் நான் இந்திரனைக் கவிஞர் என்றே அழைப்பேன் என்று மாலன் குறிப்பிட்டார்.

0

கவிஞர் இந்திரன் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், இவர் எழுதியவற்றுள் திருவடிமலர்கள்,
Syllables of silence, Acrylic Moon,பசித்த தலைமுறை, அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்,அந்நியன், காற்றுக்குத் திசையில்லை, முகில்களின் மீது நெருப்பு,நவீனகலை ஒரு தேடல், சத்யஜ்த் ரே சினிமாவும் கலையும், முப்படை நகரம்,சாம்பல் வார்த்தைகள், கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா, மின் துகள் பரப்பு ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்த நூல்களாகும்.

கவிஞர் இந்திரன் பேசிய பொழுது புகாரி கனடாவில் இருந்தாலும் தனது ஒரத்தநாட்டை மனசுக்குள்ளேயே சுமந்து சென்றிருப்பதாகத் தெரிவித்தார். பிறகு ஒரு குட்டிக் கதை ஒன்று கூறினார்.

ஒரு வெளிநாட்டுக் கவிஞர் (பெயர் நினைவில்லை) சூழலின் நிர்பந்தத்தில் தனது தாயாரை விட்டுவிட்டு அயல் தேசம் சென்றாராம், சில வருடங்கள் கழித்து அந்தக் கவிஞருடைய தாயார், அந்தக் கவிஞனின் நண்பர் ஒருவரை அழைத்து, தனது மகனைப் போய்ப் பார்த்துவிட்டு வருமாறு பணித்தாளாம், கவிஞரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய நண்பர் கவிஞனின் தாயாரிடம், கவிஞர் நன்றாக இருப்பதாகவும் தாயாரைப் பற்றி ரொம்ப விசாரித்ததாகவும் கூறியவுடன் கவிஞரின் தாயார், " என் மகன் என்ன மொழியில் பேசினான் ?" என்று கேட்டாராம். உடனே அவர் " கவிஞர் ஆங்கிலத்தில் பேசியதாகக் கூறியவுடன், கவிஞரின் தாயார் கோபமடைந்தாளாம், " நம் தாய் மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறானா ? தாய்மொழியை மறந்தவன் தாயை மறந்தவன் என்று கூறினாளாம்.

0

அண்ணாக் கண்ணன் பேசிய பொழுது, புகாரி வலைக் குழுமங்களில் தனது பெயருக்கான விளக்கம் என்ன என்பதை இரா.ம.கியிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் புகாரி என்பது தமிழ்ப்பெயரே என்று அவர் கூறியது கண்டு புகாரி மிகவும் மக்ழிச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.பெரும்பாலான இஸ்லாமியர்களின் பெயர் அரபு மொழி(உருது) சார்ந்தாகவே இருக்குமென்றும், புகாரியின் பெயர் தமிழ் மரபில் இருப்பதாலேயே தமிழில் அவருக்குப் பற்று அதிகமாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார், மேலும் புகாரியின் கவிதைகளில் சந்த நயம் துள்ளி விளையாடுவதாகப் பேசிவிட்டு புகாரியின் சிலகவிதைகளில் உள்ள சொல்லாட்சியைப் புகழ்ந்து பேசினார்.

0

படித்துறை சிற்றிதழ் நடத்தி வரும் பாடலாசிரியர் யுகபாரதி ஆரம்பம் முதலே இயல்பாகப் பேசினார்,புகாரி ஏதோ செய்யக் கூடாத காரியம் செய்துவிட்டது போலவும் எங்கே கை தட்டினால், அவர் மேலும் பல செய்யக் கூடாத காரியங்கள் செய்துவிடுவார் போலவும் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று கூறினார், இந்த மாதிரியான இறுக்கமான சூழல் வேண்டாம், அடிக்கடி கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டார்.

சிற்றிதழ் ஆரம்பிப்பவர்கள் எல்லாம் ஒரு பதிப்பகம் ஆரம்பித்துக்கொண்டு மற்றவர்களுக்கே எதிரே ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு இலக்கியத்தில் அரசியல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை யுகபாரதி முன்வைத்தார், அவர் பேசி முடித்தவுடன், மாலன், கவிஞர் யுகபாரதியும் கூடிய விரைவில் ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

0

அம்மி கவிதைத் தொகுப்பு எழுதிய வைகைச் செல்வி, புகாரியின் காதல் கவிதை ஒன்றைப் படித்து விட்டு, தற்சமயம் பல பெண்கவிஞர்கள் காமத்துப்பால் கவிஞர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

வைகைச்செல்வி பேசிக்கொண்டிருந்த பொழுது கவிஞர் வைரமுத்து அரங்கினுள் நுழைந்தார். கவிஞர் புகாரி மேடையிலிருந்து இறங்கிச் சென்று கவிஞர் வைரமுத்துவை வரவேற்றார். வைகைச்செல்வி, புகாரி எழுதிய சுட்ட வீரப்பன் வேண்டுமா ? சுடாத வீரப்பன் வேண்டுமா ? என்ற கவிதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறி அந்தக் கவிதையிலிருந்து ஒன்றிரண்டு வரிகளை வாசித்தார்.

0

பிறகு கவிஞர் புகாரி பேசத் தொடங்கினார்.கவிஞர் புகாரியின் குரல் ஏற்கனவே எனக்குப் பரிச்சயமான குரல் தான், கனடா வானொலியில் முன்பொருமுறை ஹைக்கூ கவிதையைப் பற்றி நானும், அவரும்,இளந்திரையனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கிறோம்.

கவிஞர் புகாரி பெரும்பாலும் கவிதையிலேயே பேசினார். கவிஞர் புகாரி தனது வாழ்வில் முன்னேறுவதற்காக தான் அடைந்த துயரங்களையும் மேற்கொண்ட சிரத்தைகளையும் ஒரு பாடல் மூலமாகவே கூறியது மிகவும் உருக்கமாக இருந்தது.

மேடையில் தனது தாயாருக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்த புகாரி, பொறுப்புக்கு (மாலன்) பொன்னாடை போர்த்தினேன், எனது இருப்புக்கு (தாயார்) பொன்னாடை போர்த்தினேன், இப்பொழுது கவிதை நெருப்புக்கு (வைரமுத்து) பொன்னாடை போர்த்தப்போகிறேன் என்று கூறிவிட்டு வைரமுத்துவிற்குப் பொன்னாடை போர்த்தினார்.

கவிஞர் வைரமுத்து தனது ஆதர்ச
(Inspiration) எழுத்தாளர் என்பதை புகாரி மேடையிலேயே தெரிவித்தார். நேரம் 8.45 ஆகிவிட்டது,நான் பெங்களூருக்குக் கிளம்ப வேண்டிய அவசரத்தில் இருந்தேன்.

புகாரி எழுதிய 4 கவிதைத் தொகுப்புகளையும் ( வெளிச்ச அழைப்புகள், அன்புடன் இதயம், சரணமென்றேன், பச்சைமிளகாய் இளவரசி ) ஒரு மேஜையில் அடுக்கி வைத்திருந்தார்கள். அந்த 4 புத்தகங்களையும் கைப்பற்றிக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டேன்.

கவிஞர் வைரமுத்துவின் பேச்சைக் கேட்பதற்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

என்றும் அன்பகலா
மரவண்டு
 
     
  உங்கள் எண்ணங்களில்...  
     
  வாழ்த்துரையில் கவிப்பேரரசு வைரமுத்து
புகாரிக்கு மிகமிக முக்கியமாக வாய்க்கவேண்டியது வாய்த்திருக்கிறது. அதுதான் கவிதை எழுதுகிற மனசு. புகாரி, நீங்கள் கவிஞனாக இருப்பது தான் கவிதை, நாங்களல்ல. எங்களுக்குத் தமிழ் சாப்பாடு. எங்களுக்குத் தமிழ் ஜீவிதம். நீங்கள் அப்படியல்ல. தமிழைக் கழித்துவிட்டாலும் நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். தமிழைப் பேச மறந்தாலும் உங்களுக்கங்கு பிழைப்பிருக்கிறது. தமிழ்நாட்டோடு தொடர்பில்லையென்றாலும் உங்களுக்கு அங்கு வாழ்க்கையிருக்கிறது. தமிழை வைத்துப் பணம் சம்பாதிக்கத் தேவையில்லாத, தமிழால் வயிற்றை நிரப்புவதற்கு வாய்ப்பில்லாத, தமிழில் பேசுவதால் பெரிய லாபமில்லையென்று சொல்லக்கூடிய சூழ்நிலையில் வாழ்கிற நீங்கள் கவிஞனாக இருப்பது தான் மிகச்சிறந்த கவிதை. நீங்கள் நான்காவது முறையாகக் கவிதைத் தொகுப்பு வெளியிடுகிறபோது, இவன் உண்மையாகவே தமிழைக் காதலிக்கிறவன் - புகாரி. தமிழை நேசிக்கிறவன். தமிழால் அவனுக்கொரு மயக்கமிருக்கிறது. இதெல்லாம் நீங்கள் சம்பாதித்துப் பின்னால் வீடு வாங்கவா? இல்லை. கனடாவிலிருக்கிற சேமிப்பை நீங்கள் கொஞ்சம் செலவழிக்கவேண்டும். கவிதையென்பது உங்களுக்குச் செலவு. எங்களுக்கெல்லாம் வரவு. வரவு செய்கிறவன் தமிழ் செய்வதில் ஆச்சரியமில்லை. செலவு செய்கிறவன் தமிழ் செய்வதுதான் ஆச்சரியம்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
"நான் கருவான முதல் இரவு என் முதலிரவு இல்லையாம்", "சுவர்களல்ல, அறைகளல்ல வசிப்போரின் கூட்டுயிரே வீடு", "வருவோரும் போவோரும், கண்ணே இருப்போரின் தொடர்தானே" போன்று கவிஞர் புகாரியின் கவிதைகள் முழுக்க தத்துவ வரிகளுக்குக் குறைவில்லை. தீவிரம் குன்றாத இவருடைய படிமங்கள் மனதிலிருந்து இலகுவில் மறைவதில்லை. ஓர் அனாதைக் குழந்தையை அவர் வர்ணிக்கிறார், பாருங்கள். 'வேரொழிந்த பூங்கொடியோ, கண்ணே விரலெறிந்த நகச் சிமிழோ' இன்னும் சில இடங்களில் கவிஞரின் வார்த்தைகள் சிறு காற்றில் சலசலத்து ஓடும் சிற்றோடைபோல இனிமையாகக் காதிலே வந்து விழுகின்றன. இப்படி நுட்பமான வெளிப்பாடுகள், உணர்ச்சி விளிம்புகளில் உறையும் கவிஞர்களுக்கு எப்போதோ ஓர் அபூர்வமான தருணத்தில் மட்டுமே கிட்டுபவை. பச்சைமிளகாய் இளவரசி என்ற கவிதையில், "மாலை கவிழ்ந்தால் தளிர் மடியில் என் மனதின் கிழிசல் தைக்கின்றேன்" என்கிறார். மகளுடைய சுரீர் கோபத்தைச் சொல்லும்போது 'நாக்கின் நுனியோரம் பொன் ஊசி உறைப்பு' என்கிறார். கவித்துவத்தின் உச்சம். எனக்கு மிகவும் பிடித்த கவிதை வரிகள் எவையென்றால் சமீபத்தில் இவர் எழுதிய சுனாமி பற்றிய வரிகள்தான். "படுத்துக்கிடக்கும்போதே பயமாய் இருக்கும் கடல், எழுந்து நின்றால் என்னாவது". கம்பனில் இருந்து கண்ணதாசன் கடலைப் பாடாத கவி இல்லை. ஆனால் யாராவது படுத்துக் கிடக்கும் கடல் எழுந்து நின்றது என்று வர்ணித்திருக்கிறார்களா? புகாரியின் படைப்புகள் புதுமையாக இருக்கின்றன. மயக்கவைக்கும் உவமைகளும், மனதை அசைக்கும் படிமங்களுமாக நெஞ்சிலே நிற்கின்றன.

கவிஞர் ரமணன், சென்னை
ஒரு கவிஞன் எப்போது கவிஞனாக இருக்கிறான் தெரியுமா? எழுதாத போதும் எவன் கவிஞனோ அவன்தான் எழுதும்போதும் கவிஞனாகிறான். ஆம், கவிதை என்பது எழுத்தில்தான் என்பதில்லை. எழுத்து கவிதையின் நிழல்! தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தும் தனக்குள்ளேயே, தனது பிரதிபலிப்பை விழைந்தே நடக்கின்றன என்று நம்புகிறானே அவன் கவிஞன். அப்படிப்பட்ட கவிஞன்தான் புகாரி! எல்லோரையும் விடக் கவிஞனுக்கு ஊர்ப்பெருமை மிகவதிகம். அதுவும் தஞ்சாவூர்க்காரருக்குக் கேட்பானேன்! அந்த நஞ்சைக் களஞ்சியத் தஞ்சையைப் பற்றிச் சொல்லும்போது "வானூறி மழைபொழியும் வயலூறிக் கதிர்வளையும் தேனூறிப் பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலம்கூடப் பசியாறும் தஞ்சாவூர்" என்ற வரிகளின் மூலமாக தனது ஊர்நேசத்தையும், தனது கவித்துவத்தையும் ஒருங்கே கண்முன் வைக்கிறார். அவர், தனது காதல் கவிதைகளின் தொகுப்புக்குச் 'சரணமென்றேன்' என்று தலைப்பிட்டிருப்பதே சாலப் பொருத்தம். "நீ சூரியன் உன் ஒரேயொரு பார்வையில் என் உயிர் பிரிந்து விடும் எனினும் நான் தினந்தினம் பிறவியெடுத்து உன்னையே நேசிக்கிறேன்" இதுதான் சரணாகதி. காதலையே சரண்புகுந்த புகாரி பொன்ற கவிஞர்களுக்கு நேருவதென்ன? ஒவ்வோரசைவும் இசையாகிறது. ஒவ்வொரு மெளனக் கணமும் கவிதையாகிறது. தலைகிறங்கிய ஒருமாலைப் போதில், அவையிரண்டும் கைகோத்துக்கொண்டு வரும்போது, கவிஞன் முழங்குகிறான். நாம் மயங்குகிறோம்!

அறிவியல் கட்டுரையாளர் கனடா சி. ஜெயபாரதன்
கவிஞர் புகாரியின் கவிதைகள் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை. மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளைப் பவள மாலையாகக் கோத்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கிறார். இவர் ஆக்கவுணர்ச்சி, ஆத்மவுணர்ச்சி, அன்புணர்ச்சி, அழகுணர்ச்சி. ஆவலுணர்ச்சி, விடுதலையுணர்ச்சி என்று ஆறு அம்சங்களைப் பெற்றவர். இவரின் கவிதைகள் கருத்தழகு, சொல்லழகு, நடையழகு, அணியழகு ஆகிய நான்கு கலைத்துவ நயங்கள் படைத்தவை "நீ விளைத்த பழங்கள் எல்லாம் நீ உண்ண மாட்டாய். நீ உண்ணும் கனிகளை எல்லாம் நீ விளைவித்திருக்க மாட்டாய்" கவிஞரின் இவ்வரிகள் ஒரு சிறு வேதஞானம் போல் எனக்குப் பளிச்சிடுகிறது

கவிஞர் சக்தி, லண்டன்
கவிதையின் நாயகனே, கற்பனையின் ஓவியமே, காலத்தின் முன்னோட்டமே, கருத்துக்களின் கருவறையே, தமிழன்னை சிலிர்த்து விட்டாள் தன்னையே மறந்து விட்டாள் தனயன் உந்தன் கவிமழையில் தானே தொலைந்து போனாள். வாழ்த்துக்கள்

குவியம் ஆசிரியர் பொன் குலேந்திரன்
கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை என்ற கவிதையை கணனியைப்பற்றி அறிந்த புகாரி போன்ற ஒரு கவிஞரால் தான் எழுதமுடியும். இக்கவிதையில்; தொழில் நுட்பம் கற்பனையுடன் உறவாடியிருக்கிறது. அவரது விரல்கள் தட்டச்சுப்பலகையில் சரணம் அடைந்திருக்கின்றன. காதலனையும் காதலியையும் இரு தராசு தட்டுகளாக கற்பனை செய்து ஒரு கவிதையை ஒரு கதை வடிவத்தில் எழுதியிருக்கிறார் கவிஞர். புதிய யுக்தி. இவரை இந்த சந்தர்பத்தில் புதுமையாக "கணினிக் கவிஞர்" புகாரி என்ற அழைக்க விரும்புகிறேன்.

மதுரகவி பாஸ்கரன்
கவிதை நூல் வெளியீட்டு விழாவென்றால், கனடாபோன்ற, வாழ்வு யந்திரமயமாக்கப்பட்ட நாட்டில், எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டப்படுமென்ற ஆதங்கம் எழுவதில் வியப்பில்லை. இங்கே, மணித்துளிகள் டாலர்களால் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலை ஒருபுறம், தமிழை வைத்துப் பிழைக்கும் வழி இல்லாதிருப்பது மறுபுறம். இப்படியான ஓர் அவலச் சூழ்நிலையிலும் கவிஞர் புகாரி அவர்கள், கனடாவில் வெளியிட்ட கவிதை நூல் வெளியீட்டு விழா இனிதே நிகழ்ந்தேறியது உண்மையில் ஒரு சாதனையேதான். கணிசமான ஆர்வலர்கள் கலந்துகொண்டதால் இந்த சுவையான இலக்கிய நிகழ்வு வீணாகிப் போய்விடவில்லை என்ற மனநிறைவு ஏற்படுகின்றது. வராதவர்கள் எதையோ இழந்தவர்களென்றே எண்ணத் தோன்றுகிறது.

பல்கலைத்தென்றல் ஆர். எஸ். மணி
கவிஞர் புகாரியின் பஞ்சபூதக் கவிதைகளில் ஒன்றைப் படித்து விட்டு அதில் மனதைப் பறி கொடுத்து அவருடன் தொடர்பு கொண்டேன். என் வாழ்க்கையிலேயே கவிதையைப் படிக்க விட்டு, நானாகவே தொடர்பு கொண்ட ஒரே கவிஞர் புகாரி ஒருவர்தான். தன்னுடைய மனத் தோட்டத்தில் விதை ஊன்றி, உணர்ச்சிகளையே உணவாகக் கொடுத்து மலர்ந்த எண்ண மலர்தான் உண்மைக் கவிதை. புகாரி காதலை மட்டும் பாடும் கவிஞர் அல்ல, சமூகத்தில் நடக்கும் விசயங்களையெல்லாம் கூர்ந்து நோக்கி, போற்ற வேண்டியதைப் போற்றி, தூற்ற வேண்டியதை தூற்றும் தைரியமான சீர்திருத்தவாதி, ஆழமாக சிந்தித்து தத்துவ முத்துக்களை எடுத்து வந்து நம்முன் வைக்கும் தத்துவஞானி.

கட்டுரையாளர் த. சிவபாலு
புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி. தமிழ் இலக்கியத் தோட்டம் டொராண்டோ பல்கலலக்கழகத்துடன் இணைந்து வருடாவருடம் இலக்கிய தகை சான்றோர்க்கு விருதினை வழங்கிக் கௌரவித்து வருகிறது. இலக்கியத் தோட்டத்தின் பெரும் பணியினைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குத் தனது ஆதரவுக் கரத்தினை மிகவும் நீளமாக நீட்டியுள்ளார் கவிஞர் புகாரி. இவர் தமிழ் மணங்கமழும் தென்னகத்தில் திராவிட இனத்தோன்றல் என்பதால் இவரிடம் இயல்பாகவே தமிழ்மணம் கமழ்வதில் வியப்பில்லை.

உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம்
எல்லோருடனும் அன்பாகப் பழகும் கவிஞர் புகாரியின் குணாம்சம் அவரது கவிதைகளிலிருந்து தெளிவாக வெளிப்படுகின்றது. கவிதை என்பது அதன் கருப்பொருளில் தங்கியுள்ளது. ஒருகாலத்தில் முதன்மை பெறும் கவிதை வடிவங்கள் இன்னொருகாலத்தில் பின்தள்ளப்படுகின்றன. புகாரியின் கவிதைகள் காலத்திற்கேற்றவை. யதார்த்தபூர்வமானவை இலகுவாக எல்லோராலும் புரிந்துகொள்ளத்தக்கவை .

கவிஞர் இராஜ. தியாகராஜன்
அடடா என்னே கற்பனை யூற்று!
தொடவே முடியா தூந்திர உயரம்!

நெற்றியை மாதுளம் தோலாய் நினைத்து
தெறிக்கும் சிந்தனை தனையே சிவந்த
முத்தாய் ஒப்புமை முனைந்த சீர்மை
முத்தமிழ்ப் புகாரி தந்திடும் விருந்தே! 

வார்த்தைச் சவுக்கினால் வழுட்டவே சொடுக்கி
நேர்த்தியாய் புதுக்கிய நெடுந்தமிழ்க் கோடென
சீர்த்தியாய் ஒளிபுனல் வரிகளால் சினந்தே
தேர்ந்தவர் புனைந்திடும் இயல்மனச் சிறகம்!

கவிக்கோ அப்துல் ரகுமான்
குளிர்பனி நாட்டில் கவிதைச் சுடர் ஏற்றிவைத்திருக்கிறார் புகாரி. அவருடைய இதயத்தையே நமக்கு அன்புடன் அளித்திருக்கிறார். ஒரு கவிஞனால்தான் இத்தகைய பரிசைத் தர முடியும். உணர்வுகள் மீட்டிய இசையை, நமக்காக எழுத்துக்களில் பதிவு செய்து தந்திருக்கிறார். தமிழை ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் என்று சொல்லும் புகாரிக்குக் கவிதை நன்றாக வரும். இந்தக் கவிதைகளும் நம் நெஞ்சில் கூடுகட்டிக் கொள்ளும்.

டாக்டர் ராஜரங்கன்
ஓர் அன்னை தன் குழந்தைக்குப் பாலூட்டி சீராட்டித் தாலாட்டும்போது அடையும் மனநிறைவும் மகிழ்வும் கலை உணர்ச்சி மிகுந்த ஒரு கவிஞன் தன் படைப்புக்களைத் தன்னுடைய நேரடிப்பார்வையில் உருவாக்கிய வலைத்தளத்தில் இடும்போது அடைய முடியும். இந்த உண்மையை உங்கள் வலைத்தளம் நிரூபிக்கிறது. நிறைய எழுதுங்கள்.ரசிக்கக் காத்திருக்கிறோம்! 

கணிஞர் உமர்
ஒருவருக்குப் பரிசளிக்கும்போதுகூட பெறுபவர் கை உறுத்தாது இருக்க வேண்டும் என்ற பாவனையில் அமைந்திருக்கிறது உங்கள் தளம். கண்களை உறுத்தாமல், கருத்தை உறுத்தாமல், ஏன் கணினியைக் கூட உறுத்தாமல் அமைந்திருக்கிறது.

பேராசிரியர் கனடா பசுபதி
பற்றோ தமிழ்மேல்; பணியோ கணினிமுன்;
வற்றாக் கவிநதிக்கு வைரமுத்து ஷொட்டு!
அகாத கருத்தை அழகொளிரச் சொல்லும்
புகாரி! புனைவாய் புதுசு.

கவிஞர் முத்து நிலவன்
பளிச்சென்று வந்திருக்கிறது வெளிச்ச அழைப்புகள்! ஒரு கவிதை எழுதியவுடன் 'கவிஞர்' எனும் நினைப்பில் போதையேறி, தலைக்கு மேல் ஒளிவட்டம் சுற்றுவதாக நினைத்துக்கொண்டு எதையாவது எழுதி மூன்று முறை குரலை உயர்த்தி வாசித்து அதையே கவிதையென்று சாதிப்பவர் மத்தியில், மிகுந்த அக்கறையெடுத்துத் தயாரித்திருப்பதோடு, முன்னுரை மற்றும் விமர்சனங்களுக்காக இவ்வளவு நாள் மிக மிகப் பொறுத்திருந்து, சிறப்பாக உங்கள் நூலை வெளியிட்டதே முதலில் பாராட்டுக்குரியது. உள்படங்கள், அசத்துகின்றன. பின் அட்டைப்படம் உங்கள் முகத்தைப்போலவே அழகாக வந்திருக்கிறது. மரபின் அருமையான நடை உங்கள் கவிதைகளுக்குப் புதிய உயிரைத் தருகிறது. சிவாஜி நினைவுக் கவிதாஞ்சலிக் கவிதையை தஞ்சை நண்பர் தங்க. செந்தில் குமார் தொகுக்கும் நூலுக்குத் தரவும், செப்.11: "மதத்தின் முகம் விகாரமாய்ச் சிரிக்க மனித குலம் செத்து மடிந்த உண்மை" எனும் வரிகளையும், "உலகம் என்றால் அமெரிக்கா அமெரிக்காவென்றால் உலகம் என்றிருந்த சராசரி அமெரிக்கர்களுக்கு உலக வரைபடத்தின் அறிமுகம்" எனும் வரிகளையும் எனது "கவிதையின் கதை"க்குப் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிப்பீர்கள் தானே? "மணிமேகலைப் பிரசுரத்தின்" மிகச்சிறந்த தொகுப்பாக இது திகழும்.

செந்தமிழ் ஆசிரியர் ஆசிப் மீரான்
"நிலாவிலும் கற்கள்" கண்டேன். அழகுற அமைத்திருக்கிறீர்கள் - உங்கள் கவிதைகளைப் போலவே. உங்களின் எல்லாக் கவிதைகளையும் வாசித்து மகிழ்பவன். நிலாவிலும் கற்கள் - கவித்துவமான தலைப்பு. கவிதைகள் நிறைந்த தளத்திற்கேற்ற தலைப்பேதான்.

சந்தவசந்தம் உரிமையாளர் கவிமாமணி இலந்தை
எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு எடுத்துக் காட்டாய்
இப்படி வலைத்த ளத்தை
இழையிழையாய்ச்செதுக்கி
கொப்பிலே உயர்ந்த கொப்பில்
குந்தியே இருக்கும் உங்கள்
ஒப்புயர் வற்ற உந்து
சக்தியைப் போற்று கின்றேன்
உங்கள் படங்களும் பேசும். பாக்களும் பேசும்.

பேராசிரியர் கனடா அனந்தநாராயணன்
வலைத்தளத்தை எப்படி அழகுற அமைக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்கிறது உங்கள் தளம். சந்தனப் பேழையைத் திறந்து முத்துக்களை எடுப்பதுபோலப் படிப்போர் கவிதைகளை ஒவ்வொன்றாய் எடுத்துப்பார்த்து மகிழலாம். கொள்ளைப் பாராட்டுகள்! சிந்திக்க வைக்கும் வலைத்தளத் தலைப்பு.

அகத்தியர் உரிமையாளர் டாக்டர் ஜெயபாரதி
அன்புள்ள புஹாரி, எனக்கென்னவோ நீங்கள் கவிஞர் என்பது இரண்டாவதாகத்தான் படுகிறது. என் கண்களுக்கு